உன் மகிழ்வுந்தின் கண்ணாடிகள்
ஏற்றப்பட்ட போதுதான் மறைக்கப்பட்டன
உறவுகள் பலரது முகங்கள்.
குளுகுளு அறையில்
நீ வாங்கிக் குடிக்கும்
குளிர்பானங்களின் அடியே
செத்துக் கிடக்கிறான் இளநீர் வியாபாரி.
'வாட்ஸ் அப்' செய்தியை அறிவிக்கும்
ஒற்றை 'பீப்' ஒலியில்
காதுகளை விட்டு
அப்புறப்படுத்தப் படுகின்றன
அருகிருப்போரின் அழைப்புகள்.
அத்தை, சித்தி, பெரியம்மா
மாமா, சித்தப்பா, பெரியம்மா உறவுகளை
வசதியாய் புதைத்து விட்டோம்
ஆண்ட்டி, அங்கிள்களுக்குள்.
மதிற்சுவர் எழுப்பிய
செங்கல் தீவுக்குள் வாழ்பவனே!
வங்கிப் புத்தகப் பக்கங்களிலும்;
கணினி மேசைகளுக்கடியிலும்;
கைபேசித் தொடுதிரைகளுக்குள்ளும்
உதிர்ந்து கிடக்கிறதுன் சாம்பல்.
அதையொரு கலசத்தில் சேகரித்து
நீயே கரைத்துக் கொள்
ஏதாவதொரு ஆற்றில்.
ஆயிரம் வேலையிருக்கக் கூடும்
அப்போது உன் மகனுக்கும்!
குறிப்பு:-
@ இக்கவிதை "உதிர்ந்து கிடக்கும் சாம்பல்" வலைப்பதிவர் திருவிழா-2015 மின்னிலக்கியப் போட்டி, புதுக்கவிதை (வாகை:4) பிரிவுக்காக எழுதப்பட்டது.
@ இக்கவிதை எனது சொந்தப் படைப்பென்று உறுதி அளிக்கிறேன்.
@ இக்கவிதை இட்தற்குமுன் எந்த இதழ்களிலும், ஊடகத்திலும் வெளியாக வில்லை என உறுதியளிக்கிறேன்.
அருமை
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
அருமையான கவிதை! வாழ்த்துக்கள் நன்றி!
ReplyDelete