Tuesday, October 7, 2014

வெளியேறிய சிட்டுக்குருவி


@
தேவையற்றதென ஆனபின்
அது சிதைவதைக் குறித்து
கவலைப்பட யாருமில்லை.

எதையும்
தடுப்பதுமில்லை;
உள்வரச் சொல்லி
அழைப்பதுமில்லை;
திறந்து கிடக்கிறது
சிதைந்து கிடக்கிறது,
எப்படியும் சொல்லலாம்.

படியும் தூசியில்
அக் காலடித்தடங்கள்
அழிந்து கொண்டிருப்பதாகத் தான்
சொல்கிறார்கள்
சு’வடுகளை அறியாதவர்கள்.

மழைக்கு அவ்வப்போது
உள் தெறிக்கும் சாரல்துளிகள்
இதமாகத்தான் இருக்கின்றன
அதன் காயங்களுக்கு.

யாருமற்றதென நாம்
கூறிக் கொண்டிருக்கும் இடத்தில்
எல்லாமும் இருப்பதாய்
சத்தமடத் தொடங்கியிருப்பான் நகுலன்
இதனைக் கடக்கையிலே.

சில பார்வைகளால் மட்டுமே
உள்நுழைந்து
நீங்கள் கடக்குமிந்த
சிதைந்த ஜன்னலுக்குள்
நுழைந்த ஒரு சிட்டுக்குருவி
படபடக்க வெளியேறுகிறது
எதையோ நினைவூட்டியபடி.

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...