Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, April 9, 2016

ஆதிப் பெருங்காமம்


@
இலைகளை உதிர்த்தபடி
மரத்தினுள் நுழைகிறது வெய்யில்,
இலைகள் உதிர உதிர
வெய்யிலுக்குள் நுழைகிறதொரு மரம்,
கடைசியிலையும் உதிர்ந்த கணம்
கைநீட்டியபடி நிற்குமொரு மரத்தை
அத்தனை தாபமாய் புணர்கிறது வெய்யில்,
மரத்தின் காலடியில் வழிந்து
பரவிக் கிடக்கிறது
ஒரு மரத்தின் ஆதிப் பெருங்காமம்
கறுப்புக் கோடுகளாய்!
-வைகறை

சாவிலிருந்து


@
ஒரு தூக்குக் கயிறென
தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டிற்குள்
இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த
எலியொன்று
இப்போது திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்று சாக்கிற்குள்.
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள்!
-வைகறை 

Wednesday, March 16, 2016

கலைநிகழ்ச்சிகளுக்குப் பழக்கப்பட்ட கண்கள்


@
மின்னி மின்னி எரிய வேண்டிய
மஞ்சள் விளக்கு
அணைந்து கிடக்கும் நள்ளிரவில்
அதன் தலைக்கு மேலே
மின்னிக் கொண்டிருக்குமொரு
தெருவிளக்கின் கீழே
செந்நிற அரிவாள்கள் தூரமாக
தலையும் உடலும் துண்டாகி
அனாதையாய் சாகத் தேவையில்லை.
சுபமுகூர்த்த நண்பகலில்
50 பேர் கூட கூடும் கடைவீதியில்
சாவகாசமாய் கழுத்தறுத்து,
சாவகாசமாய் புறப்படலாம் நீங்கள்.
பள்ளி கலைநிகழ்ச்சிகளுக்குப்
பழக்கப்பட்ட கண்கள்
கைத்தட்ட மறந்திருப்பது குறித்து மட்டுமாய்
ஆசுவாசப்படலாம் நாம்.
-வைகறை

Sunday, February 28, 2016

தாங்க முடியாப் பசி!

@
அணில் கடித்த பழமொன்றை
பேரனிடம் கொடுத்தார் தாத்தா.
கைகொள்ளா வண்ணம்
தாங்கிக் கொண்டிருக்கிறான் பேரன்
அணிலி்டமிருந்து பறிக்கப்பட்டவொரு
பெரிய பசியை!

Monday, November 9, 2015

விரல் நெருங்கும் போது



@
ஏனென்றுத் தெரிய வில்லை.
என் கையிலிருப்பது
புகைப்படக் கருவிதான்,
விசையை அழுத்த
விரல் நெருங்கும் போதுதான்
என் கண்களுக்கது
துப்பாக்கியாகித் திரும்புகிறது!

Sunday, November 8, 2015

ஒரு பொழுதில்!


¤
கதவுகளெல்லாம் பூட்டப்பட்டு
சாவிகளெல்லாம் களவாடப்பட்ட
ஒரு பொழுதில்
கடவுளாகவே இருக்கிறார்
கடவுள்!

கரையொதுங்கும் சடலம்!


¤
ஊர்வலமாய் சுமந்து வந்து
தூக்கிப் போட்டு
கம்பினால் அடித்துக் கரைத்த
குளத்தில்
2 மணி நேரம் கழித்து
கரையொதுங்கிக் கிடக்கிறதொரு சடலம்,
முகமெல்லாம் களிமண் அப்பியபடி!

இரவாக!


¤
இந்த அந்தியில்
உன் மௌனம் எனக்குள்
கொண்டு வந்துப் போட்ட
ஒரு துண்டு இருட்டுதான்
விரியத் தொடங்குகிறது
இன்றென் இரவாக!

இந்த மழை!!



¤
அடித்துக் கொன்று
கொல்லைப்புரத்தில் வீசியெறிந்த
செத்த எலியை உறிஞ்சிக் கொண்டு
என் வீட்டு முற்றத்திற்கு
வந்து நிற்கிறது
இந்த மழை!

Wednesday, November 4, 2015

அழுத்தப்படும் விசை


¤
அழுத்த நெருங்கும் விரலுக்கும்
விசைக்கும் இடையே
சிக்கி நசுங்குகிறதொரு மூச்சுக்காற்று!



¤
துப்பாக்கியோடு நிற்கும் உன்முன்
நிற்கிறேன் நான் ஏதுமற்று
என்றோ உனக்குக் கொடுத்தவொரு
முத்தத்தைத் தவிர!


¤
வெடித்தபின் விசையை
மாற்றி அழுத்தத் துடிக்கிறான்
கை நடுங்க ஒருவன்!
 
¤
என்னை நோக்கி
விசை அழுத்தத் துடிப்பவனே
கொஞ்சம் பொறுத்திரு.
கழற்றிக் கொள்கிறேன்
சிறுகிழிசல் கூட இல்லாத
என் சட்டையையாவது!
-வைகறை

ஆசை


¤
வானுக்கும் பூமிக்கும் இடையே
இப்படி மிதக்கத்தான் ஆசைப் பட்டான்.
ஆனால் உபரியாய் இருக்கிறது
கழுத்தில் கட்டப்பட்ட
இக்கயிறு மட்டும்.

Wednesday, September 30, 2015

உதிர்ந்து கிடக்கும் சாம்பல்



உன் மகிழ்வுந்தின் கண்ணாடிகள்
ஏற்றப்பட்ட போதுதான் மறைக்கப்பட்டன
உறவுகள் பலரது முகங்கள்.

குளுகுளு அறையில்
நீ வாங்கிக் குடிக்கும்
குளிர்பானங்களின் அடியே
செத்துக் கிடக்கிறான் இளநீர் வியாபாரி.

'வாட்ஸ் அப்' செய்தியை அறிவிக்கும்
ஒற்றை 'பீப்' ஒலியில்
காதுகளை விட்டு
அப்புறப்படுத்தப் படுகின்றன
அருகிருப்போரின் அழைப்புகள்.

அத்தை, சித்தி, பெரியம்மா
மாமா, சித்தப்பா, பெரியம்மா உறவுகளை
வசதியாய் புதைத்து விட்டோம்
ஆண்ட்டி, அங்கிள்களுக்குள்.

மதிற்சுவர் எழுப்பிய
செங்கல் தீவுக்குள் வாழ்பவனே!
வங்கிப் புத்தகப் பக்கங்களிலும்;
கணினி மேசைகளுக்கடியிலும்;
கைபேசித் தொடுதிரைகளுக்குள்ளும்
உதிர்ந்து கிடக்கிறதுன் சாம்பல்.

அதையொரு கலசத்தில் சேகரித்து
நீயே கரைத்துக் கொள்
ஏதாவதொரு ஆற்றில்.

ஆயிரம் வேலையிருக்கக் கூடும்
அப்போது உன் மகனுக்கும்!


குறிப்பு:-

@ இக்கவிதை "உதிர்ந்து கிடக்கும் சாம்பல்" வலைப்பதிவர் திருவிழா-2015 மின்னிலக்கியப் போட்டி, புதுக்கவிதை (வாகை:4) பிரிவுக்காக எழுதப்பட்டது.

@ இக்கவிதை எனது சொந்தப் படைப்பென்று உறுதி அளிக்கிறேன்.
@ இக்கவிதை இட்தற்குமுன் எந்த இதழ்களிலும், ஊடகத்திலும்  வெளியாக வில்லை என உறுதியளிக்கிறேன்.

தொகைக்கு முன்....


@
தண்ணீர் போத்தல்கொண்டு வந்த
பையனை நோக்கி நீட்டப்படுகிறது
தொகைக்குமுன்
ஒரு செம்பு தண்ணீர்,
இன்னும் கிராமங்களில்!


குறிப்பு:-
@
இக்கவிதை "வலைப்பதிவர் திருவிழா-2015" மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது. வகை:4 புதுக்கவிதை
@
இக்கவிதை எனது சொந்தப் படைப்பே என உறுதி அளிக்கிறேன்!
@
இக்கவிதை இதுவரை எந்த இதழ்களிலும், ஊடகங்களிலும் வெளியாக வில்லை என உறுதி கூறுகிறேன்.

Wednesday, September 23, 2015

மண்ணற்றவனின் மண்வாசம்


அடுக்ககத்தின்
ஐந்தாம் தளத்தில் குடியிருப்பவனின்
சன்னலோரம் அசையும்
தொட்டிச்செடியை ரசிக்கும் விழிகளுக்கும்;

வேப்பிலைகள் நிறையும்
அறையெண் குறிப்பிடப்பட்ட
அஞ்சல் பெட்டியைக் கடந்து
மின்னஞ்சல்களைத் துலாவிப் பழகிய
விரலேறிய மூளைக்கும்;

விபத்துப் பரப்பொன்றில்
மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையே
துடித்துக் கொண்டிருப்பவனை
அத்தனை லாவகமாய்க் கடந்து
அலுவலகம் ஏகும் இதயங்களுக்கும்;

யாராவது அனுப்பி வைப்போம்
பார்சலில் கொஞ்சம்
கிராமத்து மண்ணை.

அதைப் பிரிக்கும் போதாவது
மண் சொந்தமற்ற
அடுக்ககத்தில் வாழ்பவனுக்குள்
நிறையட்டும்
பண்பாட்டை உலகிற்கேத் தந்த
தன் கிராமத்து மண்வாசம்!
-வைகறை,
புதுக்கோட்டை.

ஒப்புதல்:-

@ "மண்ணற்றவனின் மண்வாசம்" எனும் இக்கவிதை "வலைப்பதிவர் சந்திப்பு 2015" நடத்தும் மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது.
@ பிரிவு: 4.புதுக்கவிதை (முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்து)
@ இக்கவிதை எனது சொந்த கற்பனையே!
@ இக்கவிதையை வேறு எந்த இதழிலோ, மின்னிதழ்களிலோ, பிற ஊடகங்களிலோ வெளியிடவில்லை என உறுதியளிக்கிறேன்.

Monday, September 21, 2015

கானல் நீர் வெற்றியில்லை

( “வலைப்பதிவர் சந்திப்பு -2015” மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது. பிரிவு: மரபுக்கவிதை )

@
பட்டனைத் தட்டி விட்டால்
     விபரங்கள் கொட்டு மென்று
சட்டெனப் புரிந்து கொள்ளும்
     சந்ததியில் நீ பி றந்தாய்!
பட்டனே இல்லா சட்டை
பறப்பதும் இங்கு தானே,
சட்டையே சிலருக் கில்லை
     என்பதை ஏன் ம றந்தாய்?

@
உலகமே கைக்குள் வந்தால்
     உலகையே வென்ற தாக
பலவாறு எண்ணு கின்றாய்;
     பாசாங்கு பண்ணு கின்றாய்!
நிலைக்கதவைத் தாண்டிச் சென்றால்
     நிற்கின்ற அடுத்த வீட்டின்
நிலையென்ன தெரியு மா?நில்!
     நின்வெற்றி புரியு தா?சொல்!

@
பணத்தையே சேர்ப்ப தைத்தான்
     வெற்றியென நீ நி னைத்தாய்
பிணத்தையே தூக்கிக் கொண்டு
     தினந்தினம் ஓடு கின்றாய்.
கணநேரம் நின்று கேட்பாய்,
     கானல்நீர் வெற்றி யில்லை;
பணம்தாண்டி உறவைச் சேர்ப்போன்
     ஆனால்நீ தோற்ப தில்லை!
-வைகறை,
புதுக்கோட்டை.

பா வகை: அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

ஒப்புதல்:-
@ இக்கவிதை எனது சொந்த கற்பனையே!

@ இக்கவிதையை வேறு எந்த இதழிலோ, மின்னிதழ்களிலோ, பிற ஊடகங்களிலோ வெளியிடவில்லை என உறுதியளிக்கிறேன்.

Thursday, September 17, 2015

ஏதோ முணுமுணுத்தபடி


கிராமத்துப் பள்ளிக்கூடம்,
கொடியேற்றுப் பயிற்சி.
'நேர் நில்'லென
சப்தமாய் குரல் கொடுக்கிறான்
மாணவர்த் தலைவன்.
அதுவரை
காற்றில் விளையாடிக் கொண்டிருந்த
பள்ளிவளாக மரமொன்று சட்டென


ம்
ஆனது.
மீண்டும் குரல் கொடுக்கிறான்
'தளர்ந்து நில்'லென.


ம்
மீண்டும் மரமாகப் படுத்து
அதன் இரண்டாம் எழுத்தில்
ஏறிக் கொண்டிருந்த ஒரு எறும்பிற்குப்
படுக்கையானது.
மீண்டும் 'நேர் நில்'லெனக்
குரல் கேட்ட போது
எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தாள்
அம்மரத்தினடியில் அமர்ந்திருந்த
மூதாட்டியொருத்தி
ஏதோ முணுமுணுத்தபடி!
-வைகறை

Thursday, August 13, 2015

<<<< புத்தர் சிலை >>>>


அந்த புத்தர் சிலை
இப்போதுதான் உடைந்து போனது.

முன்பிருந்த இடத்திலிருந்து
பாதுகாப்பான இடத்திற்கு
மாற்றி வைத்த போதுதான்
நிகழ்ந்தது அந்த விபத்து.

100 ரூபாய் கூறிய
சாலையோர முதியவரிடம்
அரைமணி நேரம் பேசி
50 ரூபாய்க்கு வாங்கப்பட்ட புத்தரது.

புத்தரின் புன்னகையை வர்ணித்தவாறே
கையிலெடுத்த நண்பனிடமிருந்து
பறித்து தான் அது பாதுகாக்கப்பட்டிருந்தது.

அன்று
கொரியர் கொண்டு வந்தவன்
ஆசையாய் பார்த்த போதே
அவனுக்குள் அலையடித்த
புத்தனைக் கையிலெடுத்துப் பார்க்கும் ஆசை
என் பார்வைகளாலேயே
மறுதலிக்கப்பட்டிருந்தது.

அந்த புத்தர் சிலைதான்
இப்போது உடைந்து கிடக்கிறது.

இப்போது
யோசித்தபடியே நிற்கிறேன் நான்,

உடைந்த புத்தரை
எதிர்கொள்வதைப் பற்றியல்ல;

என் கவலையெல்லாம்
இத்தனை நண்பர்களை இனி
எப்படி எதிர்கொள்வது என்பதுதான்.
-வைகறை.
(கொலுசு இணைய இதழில் வெளியாகியிருக்கும் எனது கவிதை)

Thursday, October 23, 2014

அப்படித்தான்..

@
பஞ்சாரத்திற்குள் கைவிட்டு
லாவகமாய்
சேவலின் கழுத்தைப்
பிடித்துக் கொடுத்தவன் இப்போது
பஞ்சாரம் புரட்ட
உள்ளசைந்து கொண்டிருக்கும்
சிறு இறகுகள் அவனிடம்
நல்லவேளை
கேள்வி எதுவும் கேட்கவில்லை,
அப்படித்தான்
அவனும் நகர்கிறான்
தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு!
-வைகறை

Thursday, October 9, 2014

பாட்டியென்றொரு பூட்டப்பட்ட கதவு!


@
யாருமற்ற பாட்டி
அப்படித்தான்
எல்லோரும் சொல்வார்கள்!

பூட்டிக் கிடக்கும்
தன் குடிசைக் கதவினை
அவள் திறப்பதெல்லாம்
தட்டியோடும் சிறுவர்களைத்
திட்டுவதற்காகவே!

வெறுமையாய்க் கடக்கும்
தபால்க்காரனை
எதிர்கொள்ள இயலாமல் கூட
அவள்
இழுத்துச் சாத்தியிருக்கலாம்
கதவை!

அம்முகவரிக்குப்
பட்டுவாடா செய்யக்
கடிதமற்ற அவனிடம்
எடுத்தெறிய ஒரு புன்னகைகூட
இல்லாமல் போன துயரம்தான்
கிரீச்சிட்டது
அவள் உள்தாழிட்ட போது!

நேற்று
கதவைத் தட்டி விட்டு
ஓட முயன்ற சிறுவர்கள்
ஏமாற்றத்தோடு நின்ற போதுதான்
ஊரேத் திரும்பிப் பார்த்தது
அக்கதவை!

இல்லாமல் போன போதுதான்
அப்பாட்டிக்கு
ஊரே இருந்தது!

இன்று
அமைதியாய்க் கடக்கிறார்கள்
சிறுவர்கள்...
பூட்டப்படாமலே கிடக்கிறது
உடைக்கப் பட்ட கதவு...
இன்னும்
படபடத்துக் கொண்டிருக்கிறது
கூரையில் சொருகப்பட்டிக்கும்
ஒரு பழைய புகைப்படம்!

Tuesday, October 7, 2014


என் மேசையின் மீது
ஒரு சங்கை வைக்கிறேன்,
அருகே
அசைந்து கொண்டிருக்கும்
காகிதத்தில் இப்போது
அலையின் சாயல்!
Related Posts Plugin for WordPress, Blogger...