Thursday, October 9, 2014

பாட்டியென்றொரு பூட்டப்பட்ட கதவு!


@
யாருமற்ற பாட்டி
அப்படித்தான்
எல்லோரும் சொல்வார்கள்!

பூட்டிக் கிடக்கும்
தன் குடிசைக் கதவினை
அவள் திறப்பதெல்லாம்
தட்டியோடும் சிறுவர்களைத்
திட்டுவதற்காகவே!

வெறுமையாய்க் கடக்கும்
தபால்க்காரனை
எதிர்கொள்ள இயலாமல் கூட
அவள்
இழுத்துச் சாத்தியிருக்கலாம்
கதவை!

அம்முகவரிக்குப்
பட்டுவாடா செய்யக்
கடிதமற்ற அவனிடம்
எடுத்தெறிய ஒரு புன்னகைகூட
இல்லாமல் போன துயரம்தான்
கிரீச்சிட்டது
அவள் உள்தாழிட்ட போது!

நேற்று
கதவைத் தட்டி விட்டு
ஓட முயன்ற சிறுவர்கள்
ஏமாற்றத்தோடு நின்ற போதுதான்
ஊரேத் திரும்பிப் பார்த்தது
அக்கதவை!

இல்லாமல் போன போதுதான்
அப்பாட்டிக்கு
ஊரே இருந்தது!

இன்று
அமைதியாய்க் கடக்கிறார்கள்
சிறுவர்கள்...
பூட்டப்படாமலே கிடக்கிறது
உடைக்கப் பட்ட கதவு...
இன்னும்
படபடத்துக் கொண்டிருக்கிறது
கூரையில் சொருகப்பட்டிக்கும்
ஒரு பழைய புகைப்படம்!

3 comments:

  1. முதுமையின் தனிமை வலியான ஒன்று

    ReplyDelete
  2. அன்புள்ள கவிஞர். வைகறை அய்யா,

    பாட்டியென்றொரு பூட்டப்பட்ட கதவால்...
    திறக்கப்பட்டது.....மனித மனங்கள்...

    இல்லாமல் போன போதுதான்
    அப்பாட்டிக்கு
    ஊரே இருந்தது!

    படமும்...கவிதையும்
    பாடமும் பாசமும் சொல்லும்.

    அருமையான கவிதை.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijametamilpandit.blogspot.in

    ReplyDelete

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...