Monday, February 22, 2016

‘ஓய்’ என்றழைக்கும் “பாஷோ-2”

‘ஓய்’ என்றழைக்கும் “பாஷோ-2”

பள்ளியிலிருந்து பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போது மீண்டும் ஒருமுறை வாசித்தேன் “பாஷோ” இரண்டாம் இதழை. உடனே ஒரு தேநீர் சாப்பிட வேண்டும் போலிருந்தது எனக்கு. தேநீர் சுவைத்தல் சுகம்; அதைத் தனிமையில் சுவைப்பது அதனினும் சுகம். தனிமையில் நாம் தேநீரை மட்டுமல்ல, தனிமையையும் சேர்த்து தானே சுவைக்கிறோம்.

“ஹைக்கூவிற்கு
அர்த்தம் கேட்ட நண்பனுக்கு
தேநீர் கொடுத்தேன்”

எனும் கவின் எழுதிய ஹைக்கூவை வாசித்த போது பற்றிக் கொண்ட ஆசையிது. இந்த ஹைக்கூவின் அர்த்தம் தேடும் நண்பனாக இப்போது நானிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றியது; உங்களுக்கு அவ்விடம் உங்களுக்கானதாகத் தோணலாம்.
ஒரு குவளை ஹைக்கூவாக; ஒரு குவளை ஜென்னாக; ஒரு குவளை இவை இரண்டும் கலந்த தேநீராக வந்திருக்கிறது ‘பாஷோ-2’

ஒரு பயணியாய் அதனுள் நுழைந்த போது என்னை, “ஓய்”, “ஓய்” என அழைத்துக் கொண்டிருந்தன பல கவிதைகள். ஒரு முறைதான் அவற்றைக் கடந்தேன்… என் செவிகளுக்குள் இன்னமும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன “ஓய்”, “ஓய்” எனும் சிறுமியின் ஓசைகள்.

பாஷோ இரண்டாம் இதழில் வெளியாகியிருக்கும் நண்பர் ஜா. ப்ராங்க்ளின் குமாரின் ஹைக்கூ இது…….
“மணல் வீட்டை
உரசிய அலையைப் பார்த்து
‘ஓய்’ என்கிறாள் சிறுமி”

கடலைக் கடல் எனப் பார்த்தால் நமக்கு வயதாகி விட்டதென அர்த்தம். குழந்தைகளுக்கு அஃதொரு செல்ல நாய்க்குட்டிதான். குழந்தைகளை நோக்கி ஓடிவரும்; அதட்டினால் ஓடி ஒளியும்; செல்லமாய் கால்களைச் சுற்றிவரும்; தடவிக் கொடுத்தால் சில்லிடும்; செல்லமாய் அடித்தாலும் முகத்தில் முத்தமிடும்; சிலசமயம் ஆசையாய் முகத்தை நக்கிவிடவும் செய்யும். இத்தனையும் நடைபெற வேண்டுமென்றால் நாம், நம் வயதைக் கொஞ்சம் உதிர்த்துப் போட்டாக வேண்டும். நமக்கானக் கட்டமைப்புகளற்ற ஒருகுழந்தையை (இப்படி இருப்பது தானே குழந்தை) இந்த ஹைக்கூவில் காட்சிப் படுத்தியிருக்கிறார் கவிஞர். கடலலையைப் பார்த்து ஒருமுறை ‘ஓய்’ என்றதோடு அக்குழந்தையின் வேலை முடிந்து விட்டது. இப்போது இது, அந்த ஹைக்கூவின் முறை; நகர விடாமல் என்னைக் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறது அது.

இந்த ‘பாஷோ-2ஆம் இதழும், இந்த ஹைக்கூவில் வரும் குழந்தை மாதிரி உரசிக் கடக்கும் என்னைப் பார்த்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த ஹைக்கூக்களை அப்படியே தருகிறேன். அவை உங்களுக்கு என்ன சொல்கின்றன என நீங்களே கேட்டுப் பாருங்கள்….

“கோடு வரைந்து கொள்வேன்
இரவு வானில்
வரிசையாய் மூன்று நட்சத்திரம்”
     -.பட்டியூர் க.செந்தில்குமார்.

“மீன் விற்கப்படுகிறது
அவ்வப்போது
தண்ணீர் தெளித்து”
    துரை. நந்தகுமார்.

“உதிர்ந்த மஞ்சள் பூவில்
மின்னுகிறது
நேற்றடித்த வெயில்”
    - பா. மீனாட்சி சுந்தரம்.

“வீட்டில் யாருமில்லை
கலந்து கொண்டிருக்கிறேன்
இரண்டு கோப்பைத் தேநீர்”
    -ச.துரை

27ஆம் பக்கத்திலிருக்கும் 12 ஹைக்கூக்களுக்கு கீழிருக்கும் ‘தூய்ஷன்’ பெயருக்குப் பதிலாக எந்தவொரு ஜப்பானிய பெயரைப் போட்டாலும் யாருக்கும் சந்தேகம் வரப்போவதில்லை. ஆகா! முத்தங்கள் தூய்ஷன்!!

சரியான ஹைக்கூக்களுக்கான சரியான இதழ் என்பதில் அத்தனை மகிழ்ச்சி கொள்ளும் போது; ஹைக்கூவிற்கு அருகே வர முயல்பவர்களையும் அரவணைத்து சேர்த்திருப்பது வாசித்ததும் புரிந்து கொள்ள முடிகிறது.

பாஷோவோடு பழகும் வாய்ப்பினை இந்த பாஷோவோடு பயணிப்பதன் மூலம் கடத்த முயலும் நண்பர் கவினின் முயற்சிக்கு எத்தனை பூச்செண்டுகளும் கொடுக்கலாம்; பூக்களால் செடிகளை மட்டுமே ஆசீர்வதிக்க விரும்புபவர்கள் “பாஷோ”வுக்கு நல்ல ஹைக்கூக்களைக் கொடுக்கலாம். இது அதனினும் சிறப்பு!!

பாஷோ இதழ் தொடர்புக்கு:
கவின் : 9942050065

ஹைக்கூ அனுப்ப: tamilhaiku@gmail.com

1 comment:

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...